Monday, July 20, 2026

 கவ ிதையையும், காதலையும் சரி விகிதத்தில் கலந்து,  நிகழ்கால இளைஞர்களை கிரங்கடித்துக்கொண்டிருக்கும், கவிஞர். நாடன் சூர்யா அவர்களின் கவிதையைதான் இன்று 20.07.2026 படித்து மகிழ்ந்தேன். இதோ அக்கவிதை



Tuesday, July 7, 2026

 இன்று நான் ரசித்தது திரு. போகன் சங்கர் அவர்களின் கவிதையை. இதோ உங்களுக்கும்...



Monday, July 6, 2026

 

எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்க முடியுமா?

எழுதுவதற்கு எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதுவது எழுத்துக்கு இழைக்கும் தீங்கு. ஆனால் பல நேரங்களில் அப்படித்தான் நடந்து விடுகிறது. காரணம், சிலவற்றையாவது எழுதியே தீர வேண்டும் என்ற பிடிவாதம். மேலும் நேரத்தை பயனுள்ளபடி செலவழிக்க இது சிறந்த வழி என்ற நம்பிக்கையும் காரணமாகிறது.


என்ன எழுதுவது என்ற கேள்விக்கே இடம் தராமல், மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தாக்குவது ஒரு கடினமான கலை. எண்ணத்தின் வேகத்திற்கு எழுத்தால் ஒரு சதவீதம் கூட ஈடு கொடுக்க இயலாது. எண்ணங்கள் லட்சக்கணக்கில் தோன்றி கணப்பொழுதில் மறைகின்றன அல்லது மாறுகின்றன. அவை எல்லாம் ஒரே எண்ணமோ என்றும் தோன்றுகிறது. தொடர்ச்சியாக வேறு வேறு வடிவம் கொண்டு அல்லது பின்னிப் பின்னி எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இயலாத காரியம். அதற்கான பல்வேறு வழிமுறைகளை முன்னோர்களும் பெரியவர்களும் சொன்னாலும், அவை பெரும்பாலோர்க்கு கடினமாகிறது.


எண்ணங்களை உற்று நோக்குதல் பலராலும் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று. ஆனால் பார்க்கும் போதே எண்ணங்கள் மாறுகின்றன அல்லது மறைந்து வேறு எண்ணங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. எண்ணங்களை எழுதி வைக்க முயற்சிக்கையில், அவை அதன் வேகம் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு வாக்கியம் தொடங்கும் போது இருக்கும் எண்ணமும், முடியும் போது இருக்கும் எண்ணமும் முற்றிலும் வேறுபட்டதாகிறது. அப்படியே எழுத்தாக்கினால், வாக்கியத்தின் அமைப்பே முறையற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் மாறிவிடுகிறது. சிந்தனையும் தெளிவற்றதாகிறது.


மனமற்ற நிலையே முக்தி என்கின்றனர் சித்தர்கள். ஆனால் மனதைக் கடத்தல் இந்த வியாபார, பொழுதுபோக்கு, ஜனரஞ்சக சமூகத்தில் இயலாது. எதை நோக்கி சிந்தனை சென்றுகொண்டிருக்கிறது என்று சர்வ நிச்சயமாய் தெரியவில்லை. எண்ணங்களுக்கு இளைப்பாறல் இல்லை போலும். ஒரு கணம் கூட மனம் முழுமையாகப் பிடிபடவில்லை.


எப்படியும் அவற்றை எழுதிவிட வேண்டும் என முயல்கையில், அவை முகமூடி அணிந்து கொண்டு வேறு எண்ணங்களை தோற்றுவித்து, பின்னால் மறைந்து கொள்கின்றன. எண்ணங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் இருக்கிறான். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணங்களே தீர்மானிக்கின்றன. அடுத்த நொடி அவை என்ன செய்யப் போகின்றன என்பதை எவரும் அறியார். உயிர் உள்ளவரை எண்ணங்களும் எழுந்துகொண்டே இருக்கும். மொழிக்கும் எண்ணத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.


எதையாவது எழுதுவதல்ல நோக்கம்; எண்ணத்தை எழுத்தாக்கும் முயற்சி. ஆனால் வழக்கம் போல் தோல்வியே.


Sunday, July 5, 2026

 நான் மிகவும் விரும்பி வாசிக்கும்.. திரு கல்யான்ஜி அவர்களின் கவிதையை இன்று (6/7/2026)  ரசித்து மகிழ்ந்தேன்.. இதோ... அக்கவிதை..



Saturday, July 4, 2026

                     இன்று (04.07.2026) நான் வாசித்து நேசித்த கவிதை:




Monday, September 15, 2014

தீபாவளி கவிதைப்போட்டி 2014


உன்மத்த சிறுக்கியவள்

 

ஒய்யார அழகியே

உன்மத்த சிறுக்கியே

கண்டாங்கி புடவைகட்டி

எனை களவு கொண்டவளே

ஓரக்கண் பார்வையால

உயிருக்குள் உறைஞ்சவளே

 

உன் வனப்ப பார்த்துவிட்டால்

கற்சிலையும் சிலாக்கிகுமடி

உன் கண்ணழகை கண்டுவிட்டால்

கயல்கூட நாணுமடி

 

நீ வச்ச பூவுக்கு

விலைமதிப்பே இல்லையடி

நீ தீண்டாத பூவெல்லாம்

தற்கொலைக்கு துடிக்குதடி

 

நீ தொடுத்த பூச்சரங்கள்

சாகாவரம் பெற்றதடி

உன் கை பட்டதால

கதவு கம்பி நெகிழுதடி

 

கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்

மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி

இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த

என் கற்புநெறி தகருதடி

 

காதலோடு உனைபார்த்தால்

ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்

திரையில் நீ தோன்றினால் போதும்

அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது

உன் வீட்டு கதவை தட்டும்

 

கடவுள் என் எதிரில் வந்தால்

உன் கொண்டையில ஒரு பூவாகவோ

கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ

காது லோலாக்கில ஒரு மணியாகவோ

உடனே மாற வரம் கேட்பேன்

தர மறுத்தால்

வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..

சிதையும் சமூகம்


கான்கிரீட் காடுகளாய்

பரந்து விரிந்து கொண்டிருக்கும்

பெருநகரங்களினூடே

சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது

கொஞ்சூண்டு மிச்சமிருக்கும்

செழுமையும் பசுமையும்...

 

பணத்திற்கும் பதவிக்கும்

பேயாய் பறக்கும் சில நபர்களிடம்

பொருளிழந்த வார்த்தைகளாய்

வலம் வருகின்றன

பகுத்தறிவும் சுயமரியாதையும்...

 

உடலிச்சைக்கு

இளந்தளிர்களை உருகுலைக்கும்

கயவர்களின் செயலால்

கல்லறைக்கு செல்கின்றன

நாகரீகமும் பண்பாடும்...

 

உயிர் வாழ்தல் பொருட்டு

எதிரியின் கால்நக்கும்

நயவஞ்சக கருநாக்குகளால்

வீழ்ந்து கிடக்கின்றன

வீரமும் விவேகமும்

 

தான்தோன்றித்தனமாய்

தலைஅறுபட்ட கோழியாய்

தறிகெட்டு ஓடும் இச்சமுதாயத்தில்

ஒரு கவிதை அழுகிறது

அருகிப்போன மனிதத்தன்மைக்கும்

கருகிப்போன தென்றலுக்குமாய்...

Friday, December 9, 2011

முல்லைப்பெரியாறு - பிரச்சனையும் தீர்வும்

முல்லைப்பெரியாறு – உண்மை நிலை
தமிழக-கேரள எல்லை பகுதியில் தீப்பற்றி எறிந்து கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை யாருக்கு தான் சொந்தம்..? கேரள எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அணைக்கு தமிழகம் உரிமை கோருவது நியாயம் தானா..? தமிழர்கள் பலருக்கே எழுந்துள்ள இதுபோன்ற கேள்விகளுக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்தும் அதன் வரலாறு குறித்தம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள “முல்லைப்பெரியாறு பிரச்சனையும் தீர்வும்” என்ற ஒர் ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு எம்நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

ஆவணப்படத்தை காண இங்கே சொடுக்கவும்

இயலுமெனில், சக தோழர்களுக்கும் அனுப்பி தமிழ் நாட்டின் நிலையை உணர்த்துவீர்

Tuesday, May 25, 2010

கடவுள் ஏன் கல்லானான்




கண் மூடி தியானிக்கையில்
கடவுள் வந்தமர்ந்தார் என் மனதில்
என்னுள் எழுந்த கேள்விக்கு
உவப்புடனே பதில் தந்தார்
இனிய தமிழில்

மண்மீது தான் படைத்த உயிர்களிலே
மனிதன் மட்டும் பாதை மாறி போனதாலே
கண்கொண்டு பார்க்க சகிக்காமல்
கல்லாகி போனதாக கடவுள் சொன்னார்

சாதிமத பேதத்தின் அடிப்படையில்
சமமற்ற சமுதாய செயல்கள் கண்டு
கல்லாய் சமைந்ததாய் சாமி சொன்னார்

காவிதறித்த சில கயவர்களின்
கருங்காலித்தனம் கண்டு
கற்சிலையாய் போனதாக சங்கடப்பட்டார்

தான் அருளிச்செய்த தீந்தமிழில்
அர்ச்சனை செய்யாத அறிவிலிக்கு
அருள்பாலிக்க மனமின்றி
கல்லாய்ப் போனதாக ஆதங்கப்பட்டார்

மனித வாழ்வின் ஆதாரமாய்
தான் அமைத்திட்ட இயற்கை வளத்தினை
மனிதன் அழித்தொழிக்க முற்படும்
அவலநிலையினை
தனக்கு தானே தோண்டிக்கொள்ளும்
சவக்குழியினை
காணும் சக்கியற்று
கல்லாகி போனதாக
கதைத்து விடைப்பெற்றார் கடவுள்;

அன்பையும் அமைதியையும் நோக்கி
மனித மனங்களை ஆற்றுப்படுத்துவோம்
கறையற்ற மானுட சமூகம் கண்டு
கல்லிருந்து கடவுளை மீட்டெடுப்போம்..

Thursday, April 8, 2010

எனது படைப்பு


“தொங்குபாலம்”
(ஒரு சிறுகதை தொகுப்பு)

Wednesday, February 24, 2010

இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!

போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
புரிந்துகொள்

நீ என் உயிர் என கூறி
உனை மட்டப்படுத்த மனமில்லை
ஆனால் நீ பிரிந்தால்
நான் பிணம் என்பதை மட்டும்
புரிந்துகொள்....
உட்பூசல்

பெண்ணே
நட்பெனும் போர்வை போர்த்தி
நாம் இருவரும்
நாகரீகமாய் நடித்தோம்
நட்பல்ல என்பது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
யார் உடைவது
என்பதில் தான்
நமக்குள் உட்பூசல்!!

Monday, February 15, 2010

என்னவள்..

நிழல் சுமக்கும் பூமி போல்
சலிக்காமல் சுமந்து திரிகிறாய்
எனக்கான காதலை..

Thursday, January 14, 2010

மரிக்கொழுந்தே! (உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)


எனை இம்சிக்க பிறந்தவளே
சிந்திய உன் பார்வைக்கே நான்
சின்னாபிண்ணமானேனடி
மிஞ்சி நீ பேசியிருந்தா
என் வம்சமே உனக்கடிமையென
கையெழுத்து இட்டிருப்பேனடி

பொல்லாத பார்வை பார்த்து
பொடிப்பொடியாக்கிட்ட
மல்லாக்க போடப்பட்ட
ஆமை போல மாத்திட்ட!

என் உசிர உறிஞ்சிட்டு
நடைபிணமா அணுப்பி வச்ச
செப்படி வித்தயில்லாம எனை
இறக்கையின்றி பறக்க வச்ச

கவிதை என்ன எழுதவச்ச
கற்பூர வாசத்தை
கழுதைக்கே தெரிய வச்சே

என் இனிய உயிர்திண்ணியே
இங்;கீலிசு முத்தம் வேணாம்
இதமான ஒரு பார்வை போதும்
எனகேதும் தரணுமுன்னா
உன் நிழல் மேல என் நிழல
சுருட்டி வைக்க ஒரு
வரம் தரியா

நீ இருக்கும் திசை நோக்கி
என் காத்த அனுப்பி வைப்பேன்
சுவாசிச்சி திருப்பி அணுப்பு
அதுவரைக்கும்
என் மூச்சை நிறுத்திவைப்பேன் !
கனவுக்கு பலமுண்டு
நெசந்தான்..
ஆனால் உன் கனவில்
நானுண்டா
உண்டுண்ணா உண்மையை சொல்லு
இல்லைண்ணா உயிர்காக்க
ஒரு பொய்யாவது சொல்லு!

Saturday, August 29, 2009

சிறுகதை-அ

கல்விக்கண்

பிரம்மாண்டமான அந்த கல்லூரியின் கட்டிடங்களை பார்க்கும் போது கணேசனின் தலை கிறுகிறுத்தது.
“இவ்வளவு பெரிய கட்டிடங்களா? நாம படிச்ச காலத்துல ஒரு ஓட்டை கீற்றுக் கொட்டகையில் தான் வகுப்பு நடக்கும். பல நேரங்களில் அதுகூட கிடைக்காது. மரத்தடி நிழலில் தான் படிப்போம்" சிறிய ஏக்கப்பெருமூச்சியுடன் கல்லூரி முதல்வரின் அறைக்கு முன் வந்தார் கணேசன்.
“என்ன வேணும் பெரியவரே?” அறைவாசலில் காவலுக்கு நின்றிருந்தவர் கேட்க, “முதல்வர் ஐயாவை பாக்கணும்” என்றார் கணேசன்.
“அப்பாயிண்மென்ட் இருக்கா?”
“அப்டின்னா…?” திகைத்தார்
“சரி, அந்த வரிசையில் உட்காருங்கள்”
வேட்டியை ஒழுங்கு செய்தபடி வரிசையில் அமர்ந்தார் கணேசன். அடுத்த நொடியே அவரைப்பற்றிய முழுவிவரத்தையும், அக்கல்லூரியின் ஊர்pயர் ஒருவர் குறித்துக் கொண்டு சென்றார்.
அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாக, தன் மகன் சொன்ன போது ஆரம்பத்தில் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், அவன் பன்னிரெண்டாம் வருப்பில், பள்ளியிலேயே முதலாவதாக தேர்வாகி, தனக்கு பெருமை சேர்த்தபோது, அவனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொண்டார், கணேசன்.
வெளியில் விசாரித்ததில், இக்;கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரை கொம்பென்றும், பெரிய பெரிய முதலாளிகளுக்கும், அமைச்சர்களுக்குமே அது கடினம் என்றும் தெரிந்தது. இருந்தாலும் முயற்சிக்கலாம் என்று வந்திருந்தார் கணேசன்.
நீண்டநேர காத்திருப்பிற்கு பின், கணேசன் முதல்வர் அறைக்குள் அணுப்பப்பட்டார்.
“வாங்க, என்ன வேணும்?” குளிரூட்டப்பட்ட அறையில், கோட் அணிந்து கொண்டு, முக்கால்தலை வழுக்கையுடன் அமர்ந்திருந்தார் முதல்வர்.
“வணக்கம் ஐயா, என் பெயர் கணேசன்” “என்ன வேணும் கணேசன்” பதில் வணக்கம் கூட செய்ய நேரமில்லையென்ற தொனியில் அலட்சியமாகவும், அவசரமாகவும் பேசினார் முதல்வர்.
“என் பையனுக்கு இடம்…” என்ற கணேசனை நிமிர்ந்து பார்த்தார் முதல்வர். லேசாக புன்னகை செய்து கொண்டே, “பெரிவரே, நீங்க இடம் தெரியாம வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நீங்க நினைக்கிறமாதிரி இது சாதரண கல்லூரி இல்லை. இங்க சேர்ந்து படிக்க பல லட்சங்கள் செலவாகும். நீங்க பீச்ல சுண்டல் விற்று வாழ்கிறவர்னு சொல்லியிருக்கீங்க. உங்க மாத வருமானமே ரெண்டாயிரம் ரு}பாய்தான்” அந்த ஊழியர் குறித்துக் கொண்டு சென்ற விவரங்களை பார்த்தபடி பேசினார் முதல்வர்.
“ஆனால் என் பையன் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கான்” இடைமறித்தார் கணேசன்.
“அப்டீன்னா, வேற கல்லூரியில் சேர்த்து படிக்க வைங்க. நீங்க போகலாம்” கடுமையானார் முதல்வர்.
திகைப்புடன் வெளியேறினார் கணேசன். ஏக்கமும் ஏமாற்றமும் அவர் முகத்தில் முகாமிட்டுருந்தது.……

இரண்டு நாட்களுக்கு பிறகு-
முதல்வர் தன் அறையில் வேலையில் மூழ்;கியிருக்க, அவரின் உதவியாளர் ஓடிவந்தார். “ஐயா, உங்க பேரன் சுனிலுக்கு விபத்தாம். மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம். உங்களை உடனே வரச் சொன்னாங்க”
துடித்துடித்துப்போனார் முதல்வர்;. மருத்துவமனை பெயரை அறிந்து கொண்டு அங்கு விரைந்தார். வாசலிலேயே அவர் மனைவி நின்றிருந்தார்.
“என்னடி, என்ன ஆச்சு?” தழுதழுத்தது குரல். “சுனில் நல்லாயிருக்காங்க, ஒரு தெய்வம் தான் நம்ம பேரப்பிள்ளையை காப்பாத்தியிருக்கு. நண்பர்களோட பீச்சுக்கு போறேன்னு சொல்லிட்டு போனான். அங்க போய் குளிச்சிருக்கான். ஒரு பெரிய அலை இவனை இழுத்துட்டு போயிடுத்து. இவன் நண்பர்கள் எல்லாம் கரையில் நின்னு கத்தியிருக்காங்க. அனா யாருமே உதவல. அந்த நேரத்தில், அங்க சுண்டல் வித்த ஒருத்தர் கடலுக்குள் குதித்து, போராடி காப்பாற்றியிருக்கார். இன்னும் இரண்டு நிமிடம் தாமதமாகியிருந்தால் கூட உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க. நான் அவரை பார்த்து பணம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்துட்டார். இந்த பரபரப்புல அவர் விக்கறதுக்காக கொண்டு வந்த சுண்டலெல்லாம் மணலில் கொட்டி வீணாயிடுத்தாம், பாத்தவங்க சொன்னாங்க. அவர் பெயர் கணேசனாம். அவருக்கு நாம ஏதாவது செய்யனுங்க..”
சுரீரென்றது முதல்வருக்கு. மருத்துவமனையில் பேரனை பார்த்து விட்டு, கல்லூரியில் குறித்து வைக்கப்பட்டிருந்த கணேசனின் முகவரியை தேடிச் சென்றார்.
குடிசை வீடு.
“வாங்க ஐயா, உட்காருங்க, இருந்த ஒரே நாற்காலியை சுத்தம் செய்து அவருக்கு கொடுத்துவிட்டு, எதிரில் பவ்யமாய் கைகட்டி நின்றார் கணேசன்.
“உங்க மகனுக்கு எங்க கல்லூரியில் இடம்தரப் போறேன்”
“ஐயா, எப்படி… என்னால பணம் தரமுடியாது”
“கணேசன், நீங்க இன்னிக்கு பீச்ல ஒரு பையனை காப்பாற்றினிங்களே, அவன் யாரு தெரியுமா? என் ஒரே செல்லப் பேரன். என் அத்தனை சொத்துக்கும் அவன்தான் வாரிசு. அவனை காப்பாத்தின உங்களுக்கு என் பரிசு” என்றார் முதல்வர்.
நிதானித்து நிமிர்ந்த கணேசன், “மன்னிக்கனும் ஐயா. கடல்ல விழுந்தது ஒங்க பேரன் என இப்பதான் தெரியும். அது யாராக இருந்தாலும், காப்பாற்றியிருப்பேன். அதுக்கு நான் பிரதி உபகாரம் எதிர்பார்க்கல. அது மட்டுமில்ல, நீங்க சொன்ன மாதிரி அசாதாரண கல்லூரியான உங்க கல்லூரியில் படித்து, என் புள்;ள பெரிய ஆளா வருவதைவிட, ஒரு சாதாரன கல்லூரியில் படித்து சாதிக்கணும்னு நான் ஆசைப்படறேன்;;. என் ஆசையை நிறைவேற்றுவதாக என் மகனும் சொல்லியிருக்கான். அதனால…”. மறுப்பில் கூட இங்கீதம் காட்டினார் கணேசன்.
முதல்வர் எழுந்து, கணேசனின்; கைகளை பிடித்துக் கொண்டார். திறந்து கொண்ட விழிகள், அவரையும் அறியாமல் நீர் சொறிந்தது.

……

“தொங்கு பாலம்” எனும் என் சிறுகதை தொகுப்பிலிருந்து...

Tuesday, August 25, 2009

கவிதை

ஒரு தலை..

உனை எனக்கு பிடிக்க

ஆயிரம் காரணங்கள் உண்டு

என்னை

நீ மறுப்பதற்கு

இருப்பது போலவே...

கட்டுரை

வீழ்ச்சியின் எழூச்சி
முன்னுரை:
பத்து முறை துவண்டு கீழே விழுந்தவனை பாசத்தோடு முத்தமிட்டு சொன்னாளாம் பூமித்தாய் ~நீ கடந்த ஒன்பது முறை வெற்றிகரமாய் எழுந்தவனல்லவா இம்முறையும் உன்னால் முடியும்’ என்று. இந்த வரிகளினுடேயுள்ள தன்னம்பிக்கை எனும் கருப்பொருளைத்தான் உயிர் நாடியாய் என் இக்கட்டுரையெங்கும் உலவ விட்டுள்ளேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை தனதாக்கிக்கொண்டிருக்கும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் சமூக வாழ்வியல் தத்துவங்களும் பறைச்சாற்றிக்கொண்டிருக்கும் உண்மை ஒன்று தான் எதுவெனில் வீழ்ச்சி கண்ட தருணங்களில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்ல எண்ணங்களுமே எழுச்சி பெற செய்திருக்கிறது.

விளக்கவுரை:
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல் படி எனலாம். அதுவே மனிதனை வீழ்ச்சியிலிருந்து காக்கும் தாரக மந்திரமாகும். தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வீழ்ச்சி காணாத மனிதன் தன் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றே சொல்லலாம். அவ்விதம் வீழ்ச்சியை சந்திக்கும் போது மனம் சோராமல் ~இதுவும் கடந்து போகும்’ எனும் மந்திரசொல்லை மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கொள்ளலாம். வீழ்ச்சி நிலையில்லை எனும் அதேசமயத்தில் எழுச்சியும் நிலையில்லை என்ற தத்துவ சித்தாந்தத்தை சிந்தையில் இருத்தி எழுச்சியில் கர்வம் கொள்ளாது தலைகணம் இல்லாது அடக்கத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட வேண்டும்.
தனக்கு என்ன வேண்டும் என்ற மனத்தெளிவு வேண்டும். தனக்கு என்ன வேண்டும் என்ற தெரியாதவர் அதை அடைவது கடினம். ஆழ சிந்தித்த பின்னரும் மனதிற்குள் சரி என்று பட்டதை தலைக்கணம் துளியும் இல்லாமல் முடியும் என்று திடமாக நம்பியதை முடியாது என உலகமே மறுத்தாலும் கடின உழைப்பாலும் மன உறுதியாலும் விடா முயற்சியாலும் சாதிக்கலாம். ~கனவு காணுங்கள் அதுவே நம் முன்னேற்றத்தின் முதல் படி என்றார் நமது முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள். ஆம் நம் கனவுகளுக்கு நாமே பிரம்மாக்கள். அவற்றிற்கு நாம் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப்போவதில்லை. ஆகவே கனவுகளை காத்து அவை உயிர் பெற கடுமையாக தன்னம்பிக்கையோடு உழைத்திட வேண்டும்.
தன்னம்பிக்கை ஊட்டும் பாடத்திட்டத்தைக் கல்வி முறையில் புகுத்துவதால் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனை இளம் வயது முதலே ஏற்படும்.

~தேடுங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் திறக்கப்படும் என பைபிளில் கூறப்படும் வாக்கியங்கள் யாவும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குறிப்பனவேயாகும்.
அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை கீழ்வரும் சில எளிய முறைகள் மூலம் மனதில் பதியம் போட்டு வைத்து பின்பற்றினால் பெரிய இலட்சியங்களை எளிதில் வெண்றெடுக்கலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சியின் முடிவு.
 ஆடையில் கவனம் செலுத்துதல் வேண்டும். நல்ல தரமான எடுப்பான ஆடைகளை உடுத்த வேண்டும். ஏனெனில் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு. சுறுசுறுப்பான வேகமான வீறுகொண்ட நடை நமக்கே நம்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிரில் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது என்பது நாம் தன்னம்பிக்கை உடையவர் என்பதை சொல்லாமல் சொல்லும் குனமாகும். நல்ல தகவல்களையும் எதிர்மறை சிந்தனையற்றவர்களின் பேச்சுகளையும் அடிக்கடி கேட்பது தன்னம்பிக்கையை தூண்ட ஏதுவாக இருக்கும். மற்றவர்கள்பற்றி குறை கூறுவதை விடுத்து நிறைகளை கண்டு நிறைய பாராட்டவேண்டும். பலர் கூடியுள்ள இடத்தில் தெரிந்த தகவல்களை தைரியமாகவும் தெளிவாகவும் பேசுதல் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயலேயாகும்.
ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதுவாகவே இருக்கிறான் என்கிறது பகவத்கீதை. ஒருவனுடைய எண்ணங்களின் தொகுப்பே அவனின் குணமாக பரிமளிக்கிறது. செயல் என்பது எண்ணத்தின் வெளிப்பாடாகும். எனவே வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற மட்டுமல்ல மீண்டும் வீழ்ச்சி நேராமலிருக்க மேலான எண்ணம் மிக மிக அவசியம். கீழான எண்ணங்கள் எதிர் மறையான விளைவுகளை தந்து அத்தகைய எண்ணம் கொண்டவரையே அழித்து விடும் சக்தியுடையது. அப்படிப்பட்ட எண்;ணங்களை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்தி நல்லதையே எண்ணி நல்ல குண நலன்களை உருவாக்கிக்கொண்டால் நல்லதே நடக்கும் என்பது உறுதி.
முடிவுரை:
சமூகத்தில் எந்த பதவியைவிடவும் ஆசிரியர் பதவி மதிப்பு மிக்கது. அவர்கள் தங்கள் மாணாக்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்குதல் வேண்டும். அதன் மூலம் ஒரு சமூகத்தையே தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்க முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்லெண்ணமும் இருக்குமேயானால் எப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் எழுச்சி கொள்ளலாம் என்பதே தௌ;ளத்தெளிவான முடிவாகும். முடியாதது முயலாதது மட்டுமே..……

Sunday, August 23, 2009

Kavithai

அனைத்தும் நீ
உலக உச்சியில்
என் கொடியே பறந்தாலும்
தெரு எச்சில் இலைக்கு - நான்
சண்டையிட்டு இறந்தாலும்
மிச்சமுள்ள அனைத்தும் - என்
தலையில் விழுந்தாலும்
அச்சமில்லை
அனைத்தும் நீ - என
அறிந்தபின்
அனைத்துயிரே!