Saturday, August 29, 2009

சிறுகதை-அ

கல்விக்கண்

பிரம்மாண்டமான அந்த கல்லூரியின் கட்டிடங்களை பார்க்கும் போது கணேசனின் தலை கிறுகிறுத்தது.
“இவ்வளவு பெரிய கட்டிடங்களா? நாம படிச்ச காலத்துல ஒரு ஓட்டை கீற்றுக் கொட்டகையில் தான் வகுப்பு நடக்கும். பல நேரங்களில் அதுகூட கிடைக்காது. மரத்தடி நிழலில் தான் படிப்போம்" சிறிய ஏக்கப்பெருமூச்சியுடன் கல்லூரி முதல்வரின் அறைக்கு முன் வந்தார் கணேசன்.
“என்ன வேணும் பெரியவரே?” அறைவாசலில் காவலுக்கு நின்றிருந்தவர் கேட்க, “முதல்வர் ஐயாவை பாக்கணும்” என்றார் கணேசன்.
“அப்பாயிண்மென்ட் இருக்கா?”
“அப்டின்னா…?” திகைத்தார்
“சரி, அந்த வரிசையில் உட்காருங்கள்”
வேட்டியை ஒழுங்கு செய்தபடி வரிசையில் அமர்ந்தார் கணேசன். அடுத்த நொடியே அவரைப்பற்றிய முழுவிவரத்தையும், அக்கல்லூரியின் ஊர்pயர் ஒருவர் குறித்துக் கொண்டு சென்றார்.
அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாக, தன் மகன் சொன்ன போது ஆரம்பத்தில் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், அவன் பன்னிரெண்டாம் வருப்பில், பள்ளியிலேயே முதலாவதாக தேர்வாகி, தனக்கு பெருமை சேர்த்தபோது, அவனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொண்டார், கணேசன்.
வெளியில் விசாரித்ததில், இக்;கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரை கொம்பென்றும், பெரிய பெரிய முதலாளிகளுக்கும், அமைச்சர்களுக்குமே அது கடினம் என்றும் தெரிந்தது. இருந்தாலும் முயற்சிக்கலாம் என்று வந்திருந்தார் கணேசன்.
நீண்டநேர காத்திருப்பிற்கு பின், கணேசன் முதல்வர் அறைக்குள் அணுப்பப்பட்டார்.
“வாங்க, என்ன வேணும்?” குளிரூட்டப்பட்ட அறையில், கோட் அணிந்து கொண்டு, முக்கால்தலை வழுக்கையுடன் அமர்ந்திருந்தார் முதல்வர்.
“வணக்கம் ஐயா, என் பெயர் கணேசன்” “என்ன வேணும் கணேசன்” பதில் வணக்கம் கூட செய்ய நேரமில்லையென்ற தொனியில் அலட்சியமாகவும், அவசரமாகவும் பேசினார் முதல்வர்.
“என் பையனுக்கு இடம்…” என்ற கணேசனை நிமிர்ந்து பார்த்தார் முதல்வர். லேசாக புன்னகை செய்து கொண்டே, “பெரிவரே, நீங்க இடம் தெரியாம வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நீங்க நினைக்கிறமாதிரி இது சாதரண கல்லூரி இல்லை. இங்க சேர்ந்து படிக்க பல லட்சங்கள் செலவாகும். நீங்க பீச்ல சுண்டல் விற்று வாழ்கிறவர்னு சொல்லியிருக்கீங்க. உங்க மாத வருமானமே ரெண்டாயிரம் ரு}பாய்தான்” அந்த ஊழியர் குறித்துக் கொண்டு சென்ற விவரங்களை பார்த்தபடி பேசினார் முதல்வர்.
“ஆனால் என் பையன் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கான்” இடைமறித்தார் கணேசன்.
“அப்டீன்னா, வேற கல்லூரியில் சேர்த்து படிக்க வைங்க. நீங்க போகலாம்” கடுமையானார் முதல்வர்.
திகைப்புடன் வெளியேறினார் கணேசன். ஏக்கமும் ஏமாற்றமும் அவர் முகத்தில் முகாமிட்டுருந்தது.……

இரண்டு நாட்களுக்கு பிறகு-
முதல்வர் தன் அறையில் வேலையில் மூழ்;கியிருக்க, அவரின் உதவியாளர் ஓடிவந்தார். “ஐயா, உங்க பேரன் சுனிலுக்கு விபத்தாம். மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம். உங்களை உடனே வரச் சொன்னாங்க”
துடித்துடித்துப்போனார் முதல்வர்;. மருத்துவமனை பெயரை அறிந்து கொண்டு அங்கு விரைந்தார். வாசலிலேயே அவர் மனைவி நின்றிருந்தார்.
“என்னடி, என்ன ஆச்சு?” தழுதழுத்தது குரல். “சுனில் நல்லாயிருக்காங்க, ஒரு தெய்வம் தான் நம்ம பேரப்பிள்ளையை காப்பாத்தியிருக்கு. நண்பர்களோட பீச்சுக்கு போறேன்னு சொல்லிட்டு போனான். அங்க போய் குளிச்சிருக்கான். ஒரு பெரிய அலை இவனை இழுத்துட்டு போயிடுத்து. இவன் நண்பர்கள் எல்லாம் கரையில் நின்னு கத்தியிருக்காங்க. அனா யாருமே உதவல. அந்த நேரத்தில், அங்க சுண்டல் வித்த ஒருத்தர் கடலுக்குள் குதித்து, போராடி காப்பாற்றியிருக்கார். இன்னும் இரண்டு நிமிடம் தாமதமாகியிருந்தால் கூட உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க. நான் அவரை பார்த்து பணம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்துட்டார். இந்த பரபரப்புல அவர் விக்கறதுக்காக கொண்டு வந்த சுண்டலெல்லாம் மணலில் கொட்டி வீணாயிடுத்தாம், பாத்தவங்க சொன்னாங்க. அவர் பெயர் கணேசனாம். அவருக்கு நாம ஏதாவது செய்யனுங்க..”
சுரீரென்றது முதல்வருக்கு. மருத்துவமனையில் பேரனை பார்த்து விட்டு, கல்லூரியில் குறித்து வைக்கப்பட்டிருந்த கணேசனின் முகவரியை தேடிச் சென்றார்.
குடிசை வீடு.
“வாங்க ஐயா, உட்காருங்க, இருந்த ஒரே நாற்காலியை சுத்தம் செய்து அவருக்கு கொடுத்துவிட்டு, எதிரில் பவ்யமாய் கைகட்டி நின்றார் கணேசன்.
“உங்க மகனுக்கு எங்க கல்லூரியில் இடம்தரப் போறேன்”
“ஐயா, எப்படி… என்னால பணம் தரமுடியாது”
“கணேசன், நீங்க இன்னிக்கு பீச்ல ஒரு பையனை காப்பாற்றினிங்களே, அவன் யாரு தெரியுமா? என் ஒரே செல்லப் பேரன். என் அத்தனை சொத்துக்கும் அவன்தான் வாரிசு. அவனை காப்பாத்தின உங்களுக்கு என் பரிசு” என்றார் முதல்வர்.
நிதானித்து நிமிர்ந்த கணேசன், “மன்னிக்கனும் ஐயா. கடல்ல விழுந்தது ஒங்க பேரன் என இப்பதான் தெரியும். அது யாராக இருந்தாலும், காப்பாற்றியிருப்பேன். அதுக்கு நான் பிரதி உபகாரம் எதிர்பார்க்கல. அது மட்டுமில்ல, நீங்க சொன்ன மாதிரி அசாதாரண கல்லூரியான உங்க கல்லூரியில் படித்து, என் புள்;ள பெரிய ஆளா வருவதைவிட, ஒரு சாதாரன கல்லூரியில் படித்து சாதிக்கணும்னு நான் ஆசைப்படறேன்;;. என் ஆசையை நிறைவேற்றுவதாக என் மகனும் சொல்லியிருக்கான். அதனால…”. மறுப்பில் கூட இங்கீதம் காட்டினார் கணேசன்.
முதல்வர் எழுந்து, கணேசனின்; கைகளை பிடித்துக் கொண்டார். திறந்து கொண்ட விழிகள், அவரையும் அறியாமல் நீர் சொறிந்தது.

……

“தொங்கு பாலம்” எனும் என் சிறுகதை தொகுப்பிலிருந்து...

Tuesday, August 25, 2009

கவிதை

ஒரு தலை..

உனை எனக்கு பிடிக்க

ஆயிரம் காரணங்கள் உண்டு

என்னை

நீ மறுப்பதற்கு

இருப்பது போலவே...

கட்டுரை

வீழ்ச்சியின் எழூச்சி
முன்னுரை:
பத்து முறை துவண்டு கீழே விழுந்தவனை பாசத்தோடு முத்தமிட்டு சொன்னாளாம் பூமித்தாய் ~நீ கடந்த ஒன்பது முறை வெற்றிகரமாய் எழுந்தவனல்லவா இம்முறையும் உன்னால் முடியும்’ என்று. இந்த வரிகளினுடேயுள்ள தன்னம்பிக்கை எனும் கருப்பொருளைத்தான் உயிர் நாடியாய் என் இக்கட்டுரையெங்கும் உலவ விட்டுள்ளேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை தனதாக்கிக்கொண்டிருக்கும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் சமூக வாழ்வியல் தத்துவங்களும் பறைச்சாற்றிக்கொண்டிருக்கும் உண்மை ஒன்று தான் எதுவெனில் வீழ்ச்சி கண்ட தருணங்களில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்ல எண்ணங்களுமே எழுச்சி பெற செய்திருக்கிறது.

விளக்கவுரை:
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல் படி எனலாம். அதுவே மனிதனை வீழ்ச்சியிலிருந்து காக்கும் தாரக மந்திரமாகும். தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வீழ்ச்சி காணாத மனிதன் தன் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றே சொல்லலாம். அவ்விதம் வீழ்ச்சியை சந்திக்கும் போது மனம் சோராமல் ~இதுவும் கடந்து போகும்’ எனும் மந்திரசொல்லை மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கொள்ளலாம். வீழ்ச்சி நிலையில்லை எனும் அதேசமயத்தில் எழுச்சியும் நிலையில்லை என்ற தத்துவ சித்தாந்தத்தை சிந்தையில் இருத்தி எழுச்சியில் கர்வம் கொள்ளாது தலைகணம் இல்லாது அடக்கத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட வேண்டும்.
தனக்கு என்ன வேண்டும் என்ற மனத்தெளிவு வேண்டும். தனக்கு என்ன வேண்டும் என்ற தெரியாதவர் அதை அடைவது கடினம். ஆழ சிந்தித்த பின்னரும் மனதிற்குள் சரி என்று பட்டதை தலைக்கணம் துளியும் இல்லாமல் முடியும் என்று திடமாக நம்பியதை முடியாது என உலகமே மறுத்தாலும் கடின உழைப்பாலும் மன உறுதியாலும் விடா முயற்சியாலும் சாதிக்கலாம். ~கனவு காணுங்கள் அதுவே நம் முன்னேற்றத்தின் முதல் படி என்றார் நமது முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள். ஆம் நம் கனவுகளுக்கு நாமே பிரம்மாக்கள். அவற்றிற்கு நாம் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப்போவதில்லை. ஆகவே கனவுகளை காத்து அவை உயிர் பெற கடுமையாக தன்னம்பிக்கையோடு உழைத்திட வேண்டும்.
தன்னம்பிக்கை ஊட்டும் பாடத்திட்டத்தைக் கல்வி முறையில் புகுத்துவதால் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனை இளம் வயது முதலே ஏற்படும்.

~தேடுங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் திறக்கப்படும் என பைபிளில் கூறப்படும் வாக்கியங்கள் யாவும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குறிப்பனவேயாகும்.
அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை கீழ்வரும் சில எளிய முறைகள் மூலம் மனதில் பதியம் போட்டு வைத்து பின்பற்றினால் பெரிய இலட்சியங்களை எளிதில் வெண்றெடுக்கலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சியின் முடிவு.
 ஆடையில் கவனம் செலுத்துதல் வேண்டும். நல்ல தரமான எடுப்பான ஆடைகளை உடுத்த வேண்டும். ஏனெனில் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு. சுறுசுறுப்பான வேகமான வீறுகொண்ட நடை நமக்கே நம்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிரில் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது என்பது நாம் தன்னம்பிக்கை உடையவர் என்பதை சொல்லாமல் சொல்லும் குனமாகும். நல்ல தகவல்களையும் எதிர்மறை சிந்தனையற்றவர்களின் பேச்சுகளையும் அடிக்கடி கேட்பது தன்னம்பிக்கையை தூண்ட ஏதுவாக இருக்கும். மற்றவர்கள்பற்றி குறை கூறுவதை விடுத்து நிறைகளை கண்டு நிறைய பாராட்டவேண்டும். பலர் கூடியுள்ள இடத்தில் தெரிந்த தகவல்களை தைரியமாகவும் தெளிவாகவும் பேசுதல் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயலேயாகும்.
ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதுவாகவே இருக்கிறான் என்கிறது பகவத்கீதை. ஒருவனுடைய எண்ணங்களின் தொகுப்பே அவனின் குணமாக பரிமளிக்கிறது. செயல் என்பது எண்ணத்தின் வெளிப்பாடாகும். எனவே வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற மட்டுமல்ல மீண்டும் வீழ்ச்சி நேராமலிருக்க மேலான எண்ணம் மிக மிக அவசியம். கீழான எண்ணங்கள் எதிர் மறையான விளைவுகளை தந்து அத்தகைய எண்ணம் கொண்டவரையே அழித்து விடும் சக்தியுடையது. அப்படிப்பட்ட எண்;ணங்களை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்தி நல்லதையே எண்ணி நல்ல குண நலன்களை உருவாக்கிக்கொண்டால் நல்லதே நடக்கும் என்பது உறுதி.
முடிவுரை:
சமூகத்தில் எந்த பதவியைவிடவும் ஆசிரியர் பதவி மதிப்பு மிக்கது. அவர்கள் தங்கள் மாணாக்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்குதல் வேண்டும். அதன் மூலம் ஒரு சமூகத்தையே தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்க முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்லெண்ணமும் இருக்குமேயானால் எப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் எழுச்சி கொள்ளலாம் என்பதே தௌ;ளத்தெளிவான முடிவாகும். முடியாதது முயலாதது மட்டுமே..……

Sunday, August 23, 2009

Kavithai

அனைத்தும் நீ
உலக உச்சியில்
என் கொடியே பறந்தாலும்
தெரு எச்சில் இலைக்கு - நான்
சண்டையிட்டு இறந்தாலும்
மிச்சமுள்ள அனைத்தும் - என்
தலையில் விழுந்தாலும்
அச்சமில்லை
அனைத்தும் நீ - என
அறிந்தபின்
அனைத்துயிரே!