Monday, September 15, 2014

தீபாவளி கவிதைப்போட்டி 2014


உன்மத்த சிறுக்கியவள்

 

ஒய்யார அழகியே

உன்மத்த சிறுக்கியே

கண்டாங்கி புடவைகட்டி

எனை களவு கொண்டவளே

ஓரக்கண் பார்வையால

உயிருக்குள் உறைஞ்சவளே

 

உன் வனப்ப பார்த்துவிட்டால்

கற்சிலையும் சிலாக்கிகுமடி

உன் கண்ணழகை கண்டுவிட்டால்

கயல்கூட நாணுமடி

 

நீ வச்ச பூவுக்கு

விலைமதிப்பே இல்லையடி

நீ தீண்டாத பூவெல்லாம்

தற்கொலைக்கு துடிக்குதடி

 

நீ தொடுத்த பூச்சரங்கள்

சாகாவரம் பெற்றதடி

உன் கை பட்டதால

கதவு கம்பி நெகிழுதடி

 

கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்

மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி

இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த

என் கற்புநெறி தகருதடி

 

காதலோடு உனைபார்த்தால்

ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்

திரையில் நீ தோன்றினால் போதும்

அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது

உன் வீட்டு கதவை தட்டும்

 

கடவுள் என் எதிரில் வந்தால்

உன் கொண்டையில ஒரு பூவாகவோ

கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ

காது லோலாக்கில ஒரு மணியாகவோ

உடனே மாற வரம் கேட்பேன்

தர மறுத்தால்

வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..

சிதையும் சமூகம்


கான்கிரீட் காடுகளாய்

பரந்து விரிந்து கொண்டிருக்கும்

பெருநகரங்களினூடே

சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது

கொஞ்சூண்டு மிச்சமிருக்கும்

செழுமையும் பசுமையும்...

 

பணத்திற்கும் பதவிக்கும்

பேயாய் பறக்கும் சில நபர்களிடம்

பொருளிழந்த வார்த்தைகளாய்

வலம் வருகின்றன

பகுத்தறிவும் சுயமரியாதையும்...

 

உடலிச்சைக்கு

இளந்தளிர்களை உருகுலைக்கும்

கயவர்களின் செயலால்

கல்லறைக்கு செல்கின்றன

நாகரீகமும் பண்பாடும்...

 

உயிர் வாழ்தல் பொருட்டு

எதிரியின் கால்நக்கும்

நயவஞ்சக கருநாக்குகளால்

வீழ்ந்து கிடக்கின்றன

வீரமும் விவேகமும்

 

தான்தோன்றித்தனமாய்

தலைஅறுபட்ட கோழியாய்

தறிகெட்டு ஓடும் இச்சமுதாயத்தில்

ஒரு கவிதை அழுகிறது

அருகிப்போன மனிதத்தன்மைக்கும்

கருகிப்போன தென்றலுக்குமாய்...