Tuesday, August 25, 2009

கட்டுரை

வீழ்ச்சியின் எழூச்சி
முன்னுரை:
பத்து முறை துவண்டு கீழே விழுந்தவனை பாசத்தோடு முத்தமிட்டு சொன்னாளாம் பூமித்தாய் ~நீ கடந்த ஒன்பது முறை வெற்றிகரமாய் எழுந்தவனல்லவா இம்முறையும் உன்னால் முடியும்’ என்று. இந்த வரிகளினுடேயுள்ள தன்னம்பிக்கை எனும் கருப்பொருளைத்தான் உயிர் நாடியாய் என் இக்கட்டுரையெங்கும் உலவ விட்டுள்ளேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை தனதாக்கிக்கொண்டிருக்கும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் சமூக வாழ்வியல் தத்துவங்களும் பறைச்சாற்றிக்கொண்டிருக்கும் உண்மை ஒன்று தான் எதுவெனில் வீழ்ச்சி கண்ட தருணங்களில் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்ல எண்ணங்களுமே எழுச்சி பெற செய்திருக்கிறது.

விளக்கவுரை:
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல் படி எனலாம். அதுவே மனிதனை வீழ்ச்சியிலிருந்து காக்கும் தாரக மந்திரமாகும். தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வீழ்ச்சி காணாத மனிதன் தன் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை என்றே சொல்லலாம். அவ்விதம் வீழ்ச்சியை சந்திக்கும் போது மனம் சோராமல் ~இதுவும் கடந்து போகும்’ எனும் மந்திரசொல்லை மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கொள்ளலாம். வீழ்ச்சி நிலையில்லை எனும் அதேசமயத்தில் எழுச்சியும் நிலையில்லை என்ற தத்துவ சித்தாந்தத்தை சிந்தையில் இருத்தி எழுச்சியில் கர்வம் கொள்ளாது தலைகணம் இல்லாது அடக்கத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட வேண்டும்.
தனக்கு என்ன வேண்டும் என்ற மனத்தெளிவு வேண்டும். தனக்கு என்ன வேண்டும் என்ற தெரியாதவர் அதை அடைவது கடினம். ஆழ சிந்தித்த பின்னரும் மனதிற்குள் சரி என்று பட்டதை தலைக்கணம் துளியும் இல்லாமல் முடியும் என்று திடமாக நம்பியதை முடியாது என உலகமே மறுத்தாலும் கடின உழைப்பாலும் மன உறுதியாலும் விடா முயற்சியாலும் சாதிக்கலாம். ~கனவு காணுங்கள் அதுவே நம் முன்னேற்றத்தின் முதல் படி என்றார் நமது முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள். ஆம் நம் கனவுகளுக்கு நாமே பிரம்மாக்கள். அவற்றிற்கு நாம் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப்போவதில்லை. ஆகவே கனவுகளை காத்து அவை உயிர் பெற கடுமையாக தன்னம்பிக்கையோடு உழைத்திட வேண்டும்.
தன்னம்பிக்கை ஊட்டும் பாடத்திட்டத்தைக் கல்வி முறையில் புகுத்துவதால் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனை இளம் வயது முதலே ஏற்படும்.

~தேடுங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் திறக்கப்படும் என பைபிளில் கூறப்படும் வாக்கியங்கள் யாவும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குறிப்பனவேயாகும்.
அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை கீழ்வரும் சில எளிய முறைகள் மூலம் மனதில் பதியம் போட்டு வைத்து பின்பற்றினால் பெரிய இலட்சியங்களை எளிதில் வெண்றெடுக்கலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சியின் முடிவு.
 ஆடையில் கவனம் செலுத்துதல் வேண்டும். நல்ல தரமான எடுப்பான ஆடைகளை உடுத்த வேண்டும். ஏனெனில் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு. சுறுசுறுப்பான வேகமான வீறுகொண்ட நடை நமக்கே நம்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிரில் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது என்பது நாம் தன்னம்பிக்கை உடையவர் என்பதை சொல்லாமல் சொல்லும் குனமாகும். நல்ல தகவல்களையும் எதிர்மறை சிந்தனையற்றவர்களின் பேச்சுகளையும் அடிக்கடி கேட்பது தன்னம்பிக்கையை தூண்ட ஏதுவாக இருக்கும். மற்றவர்கள்பற்றி குறை கூறுவதை விடுத்து நிறைகளை கண்டு நிறைய பாராட்டவேண்டும். பலர் கூடியுள்ள இடத்தில் தெரிந்த தகவல்களை தைரியமாகவும் தெளிவாகவும் பேசுதல் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் தன்னம்பிக்கையை வளர்க்கும் செயலேயாகும்.
ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதுவாகவே இருக்கிறான் என்கிறது பகவத்கீதை. ஒருவனுடைய எண்ணங்களின் தொகுப்பே அவனின் குணமாக பரிமளிக்கிறது. செயல் என்பது எண்ணத்தின் வெளிப்பாடாகும். எனவே வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற மட்டுமல்ல மீண்டும் வீழ்ச்சி நேராமலிருக்க மேலான எண்ணம் மிக மிக அவசியம். கீழான எண்ணங்கள் எதிர் மறையான விளைவுகளை தந்து அத்தகைய எண்ணம் கொண்டவரையே அழித்து விடும் சக்தியுடையது. அப்படிப்பட்ட எண்;ணங்களை கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்தி நல்லதையே எண்ணி நல்ல குண நலன்களை உருவாக்கிக்கொண்டால் நல்லதே நடக்கும் என்பது உறுதி.
முடிவுரை:
சமூகத்தில் எந்த பதவியைவிடவும் ஆசிரியர் பதவி மதிப்பு மிக்கது. அவர்கள் தங்கள் மாணாக்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்குதல் வேண்டும். அதன் மூலம் ஒரு சமூகத்தையே தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்க முடியும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நல்லெண்ணமும் இருக்குமேயானால் எப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் எழுச்சி கொள்ளலாம் என்பதே தௌ;ளத்தெளிவான முடிவாகும். முடியாதது முயலாதது மட்டுமே..……

No comments:

Post a Comment